"திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையும்" - ஜெயக்குமார் ஆரூடம்
வண்டலூர் திமுக நிர்வாகி கொலை, தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் போன்ற நிகழ்வு திமுகவின் சட்டம் ஒழுங்கிற்கு உதாரணம்
அதிமுக மீதான அச்சம் காரணமாகவே அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை திமுக நிறைவு செய்கிறது என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக - காங்கிரஸ் இடையேயான மோதல் போக்கு, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகையின் பேட்டி மூலம் உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார். கூட்டணி கட்சியினரை கைவிட்டால் அவர்கள் அதிமுக பக்கம் போய் விடுவார்களோ என்ற பயத்தின் காரணமாகவே திமுக அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது என்றும் அடுத்த 10 நாட்களுக்குள் அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
மேலும் எந்த கட்சியிலும் இல்லாத வகையில் அயலக பிரிவை ஏற்படுத்தி ஜாபர் சாதிக்கிற்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது போதை பொருள் கடத்துவதற்காக ஏற்படுத்தப்பட ஒரு பிரிவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திமுகவினர் யார் யார் பணம் பெற்றுள்ளனர் என்பதை விசாரித்து அவார்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார். திமுக ஆட்சியில் திமுகவினருக்கே பாதுகாப்பு இல்லை என்றும் வண்டலூர் திமுக நிர்வாகி கொலை, தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் போன்ற நிகழ்வு திமுகவின் சட்டம் ஒழுங்கிற்கு உதாரணம் என்றும் அவர் சாடினார்.
மத்திய அரசின் நிதிலிருந்து ரூ.1,42,000 கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்துக்கு கிடைத்திருக்கும் நிதி ரூ.7,000 கோடி தான். ஆனால் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.25,000 கோடிக்கும் அதிகமாக கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து பல லட்சம் கோடி, மத்திய அரசுக்கு நிதியாக செல்கிறது. ஆனால் கிடைத்ததோ யானை பசிக்கு சோளப்பொறி தான். இந்த அளவுக்கு ஒரு பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்யக் கூடாது. வரி பகிர்வில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் என வடக்கு, தெற்கு வரி பகிர்வில் செயல்படுகிறது என்றும், வரி பகிர்வு என்பது சீரானதாக இருக்க வேண்டும் என ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
What's Your Reaction?